கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாமகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கத்திற்கான கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
என்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று (ஜூலை 28) நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மோடி அரசுக்கும் , ஆளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவினர் என்.எல்.சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை வேனில் அழைத்து சென்றனர்.
இதனால் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை ஆகிய இடங்களிலும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதில் சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்