பாட்டாளி மக்கள் கட்சி 2023 – 2024 ஆம் ஆண்டின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்ரவரி 23) சென்னையில் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநில செய்தி தொடர்பாளர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையானது ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டுள்ளதாகும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறைக்கும் ரூ.20,000 கோடி நீர்வளத்துறைக்கும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும்.
பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும்.
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.
கொள்முதல் நிலையங்களில் வெளிமாநிலத்தவர்கள் நெல் விற்பனை செய்வதையும், முறைகேடுகளையும் தடுக்கும் நோக்குடன் உழவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் பெட்ரோலுடன் 20% எத்தனால் சேர்க்கப்படும்; எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இது 30%ஆக உயர்த்தப்படும்.
கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவு தானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
செல்வம்
காயத்ரி கொடுத்த கீ: போராட்டத்தை அறிவித்த திருமா
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!