மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசுவதற்காக மக்களவைக்கு 4 மணிக்கு வந்தார். சுமார் 5 மணியில் இருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.
ஆனால் 2 மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாமல் பாஜக அரசின் சாதனை குறித்தும், எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் மட்டுமே பேசி வந்தார். இதனால் ‘மணிப்பூர், மணிப்பூர்’ என்று முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னரே பிரதமர் மணிப்பூர் குறித்து பேச தொடங்கினார். அப்போது, “மணிப்பூர் பற்றி நான் பேசுவதை கேட்கும் தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. உண்மைகளை அவையில் நான் அடுக்கியதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மணிப்பூர் பிரச்சனை குறித்து நேற்று இங்கு பேசிய உள்துறை அமைச்சர் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார்.
தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால் மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்பும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட எந்த ஒரு முயற்சியையும் அரசு கைவிடாது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தான் மணிப்பூரில் வன்முறையை தூண்டிவிட்டுள்ளது” என்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசினார் பிரதமர் மோடி.
மோனிஷா
இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாத பிரதமர்… எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ், திமுகவை விமர்சித்த மோடி