இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள் இருப்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு, ஆகஸ்ட் 26ம் தேதி கடைசி நாளாக இருந்தது.
இந்த தேர்வுக்கு வரும் செப்டம்பர் 5ல் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, 11ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு கடந்த ஆண்டு (2021) தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மத்திய அரசு, ‘அடுத்த ஆண்டு (2022) முதல் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது.
ஆனால் கடைசியில் அந்தத் திட்டம் ‘இன்ஸ்பையர் சி’ என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த வருடத்துக்கான வினாத்தாள்களும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என திட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் வினாத்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தால் தமிழக மாணவர்கள் எப்படித் தேர்வு எழுத முடியும்?
இந்த இரண்டு மொழிகளில் மட்டும் வினாத்தாள் இருந்தால், அடிப்படையில் ஆங்கில அறிவு இல்லாத, கிராமப்புற மாணவர்களுக்கு இந்தத் தொகை எப்படிக் கிடைக்கும்?
இதனால், அதிகளவில் இந்தி மொழி பயிற்சி பெற்றவர்களே இதில் வெற்றிபெற்று உதவித் தொகைப் பெறமுடியும்.
இதையடுத்து, வினாத்தாள் இந்த இரு மொழிகளில் மட்டும் இருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 1) கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “அடித்தள மாணவர்கள் பயன்பெற என ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் கேள்வித்தாள் தருவேன் என்பது என்ன நியாயம்?
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டி போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். அநீதி.
கடந்த ஆண்டு இதேபோன்ற பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்கிறதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? இல்லை, இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவிக்கட்டும் என்று எண்ணுகிறீர்களா?
ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராடவும், நீதிமன்றத்துக்கு அலையவும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது.
மொழி உரிமை தொடர்பானது. எங்கள் குரல் சோராது; ஓயாது. தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சட்டமன்றத் தேர்தல் – இலவச வாக்குறுதி : களத்தில் இறங்கிய ராகுல்