கும்பமேளாவில் கலந்து கொள்வது பாக்கியம்… புனித நீராடிய மோடி

Published On:

| By Selvam

pm narendra modi holy dip

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 5) புனித நீராடினார். pm narendra modi holy dip

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மெளனி அமாவாசை அன்று அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காயமடைந்தனர். கும்பமேளா கூட்டநெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடினார்.

இன்று காலை பிரயாக்ராஜூக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் இருவரும், அரயில் கட் பகுதியில் இருந்து கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்கு மோட்டார் போட் மூலம் பயணித்தனர்.

மோடி வருகையை முன்னிட்டு கும்பமேளா நடைபெறும் இடத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கரையில் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு கை அசைத்து மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்திற்கு சென்ற மோடி, புனித நீராடி சூரியனை வணங்கினார். பின்னர் அங்குள்ள பிரயாக்ராஜ் கோவிலில் பூஜை செய்தார்.

இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது பாக்கியம். அதில் பங்கேற்ற கோடிக்கணக்கானவர்களைப் போலவே, நானும் பக்தி உணர்வால் நிரப்பப்பட்டேன். கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்லிணக்கத்தை அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார். pm narendra modi holy dip

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share