சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 50 சதவிகிதம் நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (செப்டம்பர் 30) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணிகளானது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
இந்தசூழலில் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கூறும்போது, “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநில திட்டமாக மாற்ற 2018 ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. இதனால் மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கான முழு செலவையும் மாநில அரசு மட்டுமே ஏற்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தை நிறைவேற்ற 50 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசின் நிதி ஒப்புதலை உறுதிப்படுத்தும் முன்பாகவே தமிழக அரசு இத்திட்டத்தை மாநில அரசு திட்டமாகத் தொடங்க முடிவு செய்தது. ரூ.63,246 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், நிதிப் பற்றாக்குறையால், முடங்கி போய் கிடக்கிறது.
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது என்று திமுக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வேலைகள் நடந்துள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு 50% பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கட்சியையும் கையிலெடுக்கும் உதயநிதி – மாவட்டப் பிரிவினை ரெடி…. மாசெக்கள் திகில்!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு!