பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை இன்று (ஆகஸ்ட் 23) கீவ் நகரில் சந்தித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்து வருகிறது. தினமும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதும், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில், போர் நடைபெறும் உக்ரைன் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருப்பது உலகளவில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
உக்ரைன் சென்ற மோடி, கீவ் நகரில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போரில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மரின்ஸ்கி அரண்மனையில் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அங்கு இருநாட்டு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இந்த சந்திப்பின் போது, வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இந்திய மனிதாபிமான மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-2028 க்கான கலாச்சார ஒத்துழைப்பு திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
உக்ரைன் பயணம் குறித்து மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உக்ரைனுக்கு வந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா – உக்ரைன் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன்.
அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். உக்ரைனில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உக்ரைன் அரசும், மக்களும் அளித்த விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அணிவகுக்கும் பக்தர்கள்: களைகட்டும் முருகன் மாநாடு… முழு விவரம் இதோ!