போன வருடம் ட்விட்- இந்த வருடம் விசிட்: தேவர் குருபூஜையில் மோடி? 

அரசியல்

முத்துராமலிங்கத் தேவரின்  குருபூஜை வரும் அக்டோபர்  30 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்,

இந்த வருடம்  தேவர் கோயில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு பிரதமர் மோடி வர இருப்பதாக இன்று தகவல்கள் பரவி வருகின்றன.

தென் மாவட்டங்களில் அக்டோபர் 30 என்பது சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மட்டுமல்ல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் மாறிவிட்டது. அன்றுதான் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் அனேக அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தங்களுடைய வருகைப் பதிவை நிரூபிக்கும் நிகழ்வாகவே மாறி வருகிறது.

கள்ளர், மறவர், அகமுடையர் எனப்படும் முக்குலத்தோரின் வாக்கு வங்கியை வேட்டையாடும் ஒரு விழாவாகவே அரசியல் கட்சியினரால் இது மாறி வருகிறது.

இந்த நிலையில்தான் இந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக இன்று  (அக்டோபர் 11) காலை முதலே பரபரப்பு கிளம்பியது.

பிரதமர் டெல்லியில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்து அங்கிருந்து பசும்பொன் வந்துவிட்டு அன்றே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என்றும் அந்த செய்திக்கு இறக்கைகள் விரித்து பறந்தன.

pm modi visit thevar jayanthi pasumpon tamilnadu

கடந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி  பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவு கூர்ந்து ட்விட்டர் பதிவிட்டார்.

அவர்,  “தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்நாளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவு கூறுகிறேன்.

துணிச்சலும் கனிவான உள்ளமும் கொண்டவர். பொதுநலன் மற்றும் சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தொண்டாற்றினார்”  என்று குறிப்பிட்டிருந்தார் மோடி.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒதுக்கப்பட்டதால் அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது.

அதில்  குறிப்பிடத் தக்க அளவு திமுக கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியே முத்துராமலிங்கத் தேவரைத் தேடி பசும்பொன்னுக்கு வரும் பட்சத்தில் முக்குலத்தோர் வாக்குகளை பாஜக ஒரு கை பார்க்கலாம் என்ற கருத்தும் பாஜக நிர்வாகிகளால் முன் வைக்கப்படுகிறது.

மோடி பசும்பொன்னுக்கு வருகை தரும் திட்டம் உள்ளதா என்று தமிழக பாஜக நிர்வாகிகள் மூவரிடம் தனித்தனியாக கேட்டபோது,  “வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன” என்றார்கள்.

சாதாரணமாகவே தேவர் ஜெயந்தியை ஒட்டி தென் மாவட்டங்களில் காவல்துறை, உளவுத்துறை ஆகிய அமைப்புகளுக்கு கடுமையான சவால்கள் இருக்கும்.

பிரதமர் மோடி வருகிறார் என்றால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இது இன்னும் கூடுதலாகும்.

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு ராமநாதபுரம்  மாவட்டத்துக்கு உட்பட்ட  பசும்பொன்னுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி வர வாய்ப்புள்ளதாக வரும் தகவல்கள் பற்றி  கேட்டோம்.  “இதுவரை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் ஏதும் வரவில்லை” என்றார். 

ஆரா

மானநஷ்ட வழக்கு: வாபஸ் வாங்கிய வேலுமணி நண்பர்

புதிய நிர்வாகிகள்: எடப்பாடி மாவட்டத்தில் கை வைத்த பன்னீர்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *