பிரதமர் வரவேற்பில் பிடிஆர் மிஸ்ஸிங்: தவிர்த்தாரா… தவிர்க்கப்பட்டாரா?
திண்டுக்கல் விழாவுக்காக மதுரை வருகை தந்த பிரதமர் மோடியை, மதுரையைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்காதது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று (நவம்பர் 11) ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார்.
மதுரை விமான நிலையம் வந்த அவரை,
தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். அதுபோல் திண்டுக்கல் சென்ற பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர், காந்தி கிராம பல்கலை நிகழ்ச்சி முடிந்த பிறகும் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மதுரையைச் சேர்ந்த அமைச்சரான பிடிஆர் பழனிவேல் ராஜன் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியது.
இதுகுறித்து மதுரை திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரத்தில், மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் பி.மூர்த்தி, தன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றதால் இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தின்போது பிடிஆருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற பிடிஆர் கார் மீது, பாஜக தொண்டர்கள் காலணிகளை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினைக்கு முதல்வரிடமிருந்து ஒருநாள் கழித்துத்தான் ரியாக்ஷன் வந்தது என்ற வருத்தமும் பிடிஆருக்கு இருந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறபோது அங்கே பாஜகவினரும் திரளும் சூழல் ஏற்படும் என்பதால், மீண்டும் விமான நிலையத்தில் தன்னால் சர்ச்சைகள் எதுவும் எழுவதை பிடிஆர் விரும்பவில்லை.
இதை முதல்வருக்கும் தெரியப்படுத்திவிட்டார். மேலும், தன் சக அமைச்சரான மூர்த்தியோடு இருக்கும் கசப்புணர்வு காரணமாகவும் இந்த நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இந்த பின்னணியில் பிரதமர் மதுரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே சென்னை சென்றுவிட்டார் அமைச்சர் பிடிஆர்.
நவம்பர் 10ஆம் தேதி, தேசிய உணவகங்கள் சங்கத்தின் சென்னை பிரிவு தொடக்க விழாவில் கலந்துகொண்டிருக்கிறார், பிடிஆர்.
மதுரையில் பிரதமர் விசிட் தொடர்பான பரபரப்புகள் ஓய்ந்த பின்னர், இன்று (நவம்பர் 12) மீண்டும் மதுரைக்கு வந்தார் பிடிஆர்.” என்கின்றனர்.
தீர்ந்தது நிலக்கரி… மூடப்படும் என்.எல்.சி.: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!