திண்டுக்கல்லுக்கு நாளை (நவம்பர் 11) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே சென்று வரவேற்க உள்ளனர்.
திண்டுக்கல் காந்தி கிராம, பல்கலைக்கழத்தில் நாளை (நவம்பர் 11) பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தைப் பிரதமர் மோடி வழங்குகிறார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது.
பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே மதுரை பயணம் செய்ய உள்ளனர்.
இதற்காக, நாளை காலை 9.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும், காலை 10.50 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளனர். நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் தனித்தனியே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தனித்தனியாகவே சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
ஆதாரை புதுப்பிப்பது அவசியம்: மத்திய அரசு அதிரடி!
கனமழை: நாளை 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!