திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி நாளை (ஜனவரி 2) கலந்து கொள்கிறார்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் அவர் இதனை தெளிவுபடுத்தினார்.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில், ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் பிரதமர் மோடியை நாளை வரவேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தமிழக பாஜக மாநில நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பிரதமர் மோடிக்கு நாளை வரவேற்பு அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் மோடி
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!