இந்திய பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று (ஜூன் 20) காலை அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க உள்ளார்.
பின்னர் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு இரவு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி விருந்து அளிக்க உள்ளனர்.
இதில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பங்கேற்க உள்ளனர்.
வெள்ளை மாளிகையில் பைடன் விருந்து அளிக்கும் 3-வது உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்திருக்கிறார்.
தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி.
ஜூன் 23 ஆம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளார்.
பின்னர் இந்திய வம்சாவளி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்க உள்ளார். பிறகு அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
அன்று இரவு இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார்.
பிரதமர் மோடி ஜோ பைடன் உடன் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
முன்னதாக தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்திருந்தார்.
அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு செல்கிறார்.
அப்போது, தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்கு செல்கிறார். கடந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மசூதியை இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா முஸ்லிம்கள் தங்கள் சொந்த செலவில் மறுகட்டமைப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் உட்பட அனைத்து வீரர்கள் நினைவாக கெய்ரோவில் புதிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்திற்குச் சென்று பிரதமர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.
மோனிஷா
மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்? பகுதி 13
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்: தங்கம் தென்னரசு உறுதி!