பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ்( BRICS) என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் முப்பதாவது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
வரும் 22 முதல் 24 ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமருக்கு தென்னாப்பிரிக்க அதிபர் விளக்கினார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
பரஸ்பர நலன் கொண்ட பல்வேறு விவகாரங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தர ஆவலாக இருப்பதாகக் கூறினார்”என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வணிகர் சங்க நிர்வாகிகள்!
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள்!