கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக கடந்த அக்டோபர் 25ம் தேதி பதவியேற்றார்.
இதன்மூலம் அந்நாட்டின் 200 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
அவருக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
அப்போது இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று (அக்டோபர் 27 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று ரிஷி சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக அவர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள்.
எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம். விரிவான மற்றும் சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ.) குறித்து முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
நன்றி தெரிவித்த ரிஷி சுனக்!
இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, ரிஷி சுனக் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது புதிய பொறுப்பை நான் தொடங்கும்போது, அன்பான வார்த்தைகள் கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
இங்கிலாந்தும், இந்தியாவும் பலவற்றை அதிகம் பகிர்ந்து வருகின்றன. வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வருடங்களில் நமது பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்துவதால், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் அடையப் போவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100பில்லியன் டாலராக அதிகரிக்க இந்தியாவும் இங்கிலாந்தும் இலக்கு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வெளியானது சமந்தாவின் யசோதா டிரைலர்!
கோவையின் மருமகளாக தமிழிசையின் வேண்டுகோள்: செவிசாய்க்குமா தமிழக அரசு!