இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 113-வது அத்தியாயத்தில் மோடி பேசியபோது,
“நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதம்!
அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான்.
அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன. பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள். தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை. கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள்.
குடும்ப அரசியல் புதிய திறமைகளை அழித்து விடுகிறது!
குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.
நண்பர்களே, சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை. இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள்.
இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது. நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது.
அனைத்து இடங்களிலும் மூவண்ணக் கொடி!
இல்லந்தோறும் மூவண்ணக்கொடி – இந்த இயக்கம் இந்த முறை முழுவீச்சில் நடந்தேறியது. தேசத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன.
நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து இடங்களிலும் மூவண்ணக்கொடி. மக்கள் தங்கள் கடைகளில், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள்.
தங்கள் கணிப்பொறிகளில், செல்பேசிகளில், வண்டிகளில் மூவண்ணக் கொடியைப் பறக்கச் செய்தார்கள். மக்கள் அனைவருமாக இணைந்து இப்படிப்பட்ட உணர்வினை எப்போது வெளிப்படுத்துகிறார்களோ, அப்போது அது அந்த இயக்கத்திற்கு மகுடம் சூட்டி விடுகிறது.
இப்போது நீங்கள் உங்கள் டிவி திரையில் காணும் படங்கள், இவை ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்தது. இங்கே 750 மீட்டர் நீளம் கொண்ட மூவண்ணக் கொடியோடு கூடிய ஒரு மூவண்ணப் பேரணி நடத்தப்பட்டது.
மேலும், இது உலகின் மிகவும் உயரமான சினாப் ரயில்பாலத்தின் மீது நடந்தது. யாரெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தார்களோ, அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பின.
ஸ்ரீநகரின் டல் ஏரியிலும் கூட மூவண்ணக்கொடி யாத்திரையின் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களை நாம் அனைவரும் கண்டோம். அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமேங்க் மாவட்டத்திலும் கூட 600 அடி நீளமான மூவண்ணக் கொடியோடு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிப்பு!
தேசத்தின் பிற மாநிலங்களிலும் கூட இதைப் போலவே, அனைத்து வயதினரும், இப்படிப்பட்ட மூவண்ணக்கொடிப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். சுதந்திரத் திருநாள் இப்போது ஒரு சமூகத் திருநாளெனவே ஆகி வருகிறது.
இதனை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள். மக்கள் தங்களுடைய இல்லங்களையும் கூட மூவண்ண மாலைகளால் அலங்கரிக்கின்றார்கள். சுய உதவிக் குழுக்களோடு இணைந்த பெண்கள், இலட்சக்கணக்கான கொடிகளைத் தயார் செய்கின்றார்கள்.
இணையவழி வர்த்தகத் தளங்களில் மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிக்கின்றன. சுதந்திரத் திருநாளின் போது தேசத்தின் நீர்-நிலம்-வானம் என அனைத்து இடங்களிலும் நமது கொடியின் மூன்று நிறங்கள் பளிச்சிட்டன. இல்லந்தோறும் மூவண்ணம் இணையதளத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் படத்தையும் தரவேற்றம் செய்திருந்தார்கள். இந்த இயக்கமானது தேசம் முழுவதையும் ஓரிழையில் இணைத்தது. இது தானே ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்தில் எப்போது? – அன்புமணி கேள்வி!
“கதரில்தான் கொடி” என்று இருந்ததை மாற்றி, பாலியெஸ்டரில் கூட தேசியக்கொடி இருக்கலாம் என சட்டத்தை இயற்றி, உங்கள் “நண்பருக்கு” உதவி செய்து, வருடா வருடம் “எல்லாரும் கொடி ஏத்துங்கோ”னு விளம்பரம் செய்யற அந்த நல்ல மனசு இருக்கே