தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 10) குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூரில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது,
“இந்தியா இன்று உலகின் வல்லரசு நாடாக மாறி வருகிறது. இதில் விண்வெளி, ராணுவ உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் என தமிழகத்தின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது.
உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விரைவில் விமான நிலையம் அமைய இருக்கிறது. மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திமுக இன்னும் பழைய சிந்தனையில் உள்ளது. அக்கட்சியின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள். திமுகவில் போட்டியிட வேண்டும் என்றால் நீங்கள் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராகவோ, ஊழல் செய்பவராகவோ அல்லது தமிழ் கலாச்சாரத்தை எதிர்ப்பவராகவோ இருக்க வேண்டும்.
திமுக தான் ஊழலுக்கான முதல் காப்பீட்டு உரிமையை வைத்துள்ளார்கள். கொள்ளையடிப்பதை தவிர அவர்கள் எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மணல் கொள்ளையர்களால் தமிழகத்திற்கு ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. ஆனால், அந்த நிதிகளை முழுவதுமாக திமுக கொள்ளையடிக்கிறது.
தமிழகத்தின் சின்னஞ்சிறு குழந்தைகளை கூட திமுகவால் காப்பாற்ற முடியவில்லை. காரணம், தமிழகத்தின் பள்ளிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதைக் கடத்தல் கும்பல் திமுகவின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். என்சிபி-யால் கைது செய்யப்பட்ட போதைக்கடத்தல் தலைவன் எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆகவே, திமுகவின் இந்த பாவங்கள் அனைத்திற்கும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடி: வெற்றிக் கனி பறிக்கும் கனிமொழி… வெகுதூரத்தில் எதிர்க்கட்சிகள்!
Comments are closed.