“இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி”: பிரதமர் மோடி பெருமிதம்!

Published On:

| By Selvam

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தாம்பரம் – செங்கோட்டை ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, “தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் சிறப்பான ஒன்றாகவே உள்ளது. தமிழ்நாடு வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் புகலிடமாகவும் இலக்கியம் மற்றும் மொழிகளின் பிறப்பிடமாகவும் உள்ளது. நமது நாட்டின் பெரும்பாலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது. புதிய ஆற்றல், புதிய நம்பிக்கைகள் வர உள்ளது. இன்று துவங்கப்பட்ட சாலை, ரயில், விமான நிலைய திட்டங்கள் புத்தாண்டு திட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு வசதியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம்.

2014-ஆம் ஆண்டு வரை 77 விமான நிலையங்கள் கட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு மடங்காக உயர்த்தி 150 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு இந்தியாவில் 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தது. 2024-ஆம் ஆண்டில் 660 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் நாம் தான் உலகத்தில் முதலிடத்தில் உள்ளோம். விலை குறைவான டேட்டாக்கள் நம்மிடம் தான் உள்ளன. வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்காக உள்ளது.

கட்டமைப்பு என்பதை நாங்கள் வெறும் சிமெண்ட், செங்கல் கலவையாகப் பார்க்கவில்லை. நாங்கள் அதனை மனிதத்தோடு அணுகுகிறோம். கோவை சென்னை வந்தே பாரத் ரயில் சிறு தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் உலகத்தை தமிழ்நாட்டிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

ரயில்வே துறை கட்டமைப்பிற்காக தமிழ்நாட்டிற்கு ரூ.6000 கோடி இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-14-ஆம் ஆண்டில் ஓராண்டிற்கு ரூ.900 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004- 14-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 800 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கப்பட்டது. 2014-23 முதல் 2000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பி.எம் மித்ரா டெக்ஸ்டைல் ஜவுளி பூங்கா, பெங்களூரு – சென்னை விரைவு சாலை, சென்னைக்கு அருகே பல்முனை ஏற்பாட்டியல் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலை பாரத் மாலா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவையில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிப்போம் என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பூமியில் இயல்பானது தானே. கோயம்புத்தூர் நகரம் தொழில்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. கோவை சென்னை வந்தே பாரத் ரயில் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக உள்ளது.

மதுரை தமிழ்நாட்டின் கலாச்சார தலைமையிடமாக உள்ளது. இது உலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. இன்று செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மதுரையின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்” என்றார்.

செல்வம்

பிரதமருடன் ஒரே காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி : பிரதமர் முன் மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share