2036-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறோம் என்று பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) தெரிவித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “விளையாட்டில் தலைசிறந்த உலக நாடுகளில் ஒன்றாக இந்தியாவை பார்க்க நாம் அனைவரும் விரும்புகிறோம். இதற்காக நாட்டில் தொடர்ந்து பெரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுவது மிகவும் முக்கியம்.
வீரர்கள் அனுபவம் அதிகரிக்க வேண்டும். ஆரம்ப நிலையிலிருக்கும் வீரர்கள் தேர்வு பெற்று பெரிய நிகழ்வுகளில் விளையாட வேண்டும். கேலோ இந்தியா பிரச்சாரம் இன்று அதற்கு வழிவகுக்கிறது. 2018 முதல் இதுவரை 12 கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இளைஞர் விளையாட்டு போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் உங்களுக்கு விளையாடவும் புதிய திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.
இப்போது மீண்டும் ஒருமுறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி, பார்வையாளர்களாக இருந்தாலும் சரி சென்னையின் அழகான கடற்கரையின் அழகில் மயங்குவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மதுரையின் தனித்துவமான கோயில்களின் மகத்துவத்தை நீங்கள் உணருவீர்கள். திருச்சியின் கோவில்கள், அங்குள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உங்களை கவர்ந்திழுக்கும்.
கோவையில் உள்ள கடின உழைப்பாளிகள், தொழில்முனைவோர்கள் உங்களை முழுவதும் கவர்வார்கள். தமிழ்நாட்டின் இந்த அனைத்து நகரகங்களிலும் நீங்கள் ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு தெய்வீக அனுபவத்தை பெறுவீர்கள்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 30 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவார்கள்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் களத்திற்கு வரும்போது இங்குள்ள சூழல் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் போட்டிகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தட்டும். முதல்முறையாக கேலோ இந்தியா போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்குவாஷில் காணப்படும் உற்சாகத்தை நாம் எதிர்நோக்குகிறோம்.
தமிழ்நாட்டின் பழம்பெருமை மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கும் சிலம்பத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
மாபெரும் துறவி திருவள்ளுவரின் பூமி தமிழ்நாடு. துறவி திருவள்ளுவர் தனது குறள்களால் இளைஞர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கி அவர்களை முன்னேற ஊக்குவித்தார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சின்னத்தில் திருவள்ளுவரின் உருவமும் இடம்பெற்றுள்ளது.
இந்தமுறை கேலோ இந்தியா போட்டிகளின் சின்னமாக வேலு நாச்சியார் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் பெண் சக்தியின் அடையாளம். விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரம் அளிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் 20 விளையாட்டுகளில் மகளிர் லீக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா வரலாறு படைத்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய விளையாட்டுத்துறை புதிய நம்பிக்கை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த விளையாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது. 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3-ஆவது பொருளாதார நாடாக மாறும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…