மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பாரபட்சமின்றி சிறப்பாக வழிநடத்தினார் என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 10) பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 10) பிரதமர் மோடி பேசும்போது,
“இந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீர்திருத்தம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவது மிகவும் அரிதானது. நம் கண் முன்னே அந்த மாற்றத்தை கண்டுகொண்டிருக்கிறோம்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களே, நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடனே இருந்தீர்கள். உங்கள் புன்னகை ஒருபோதும் மறையவில்லை. நீங்கள் இந்த சபையை பாரபட்சமற்ற முறையில் வழிநடத்தினீர்கள்.
இதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். சில சமயங்களில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், பொறுமையாக நிலைமையை கட்டுப்படுத்தி சபையை வழிநடத்தினீர்கள். இதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அனைவரும் பேசி வந்தனர். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உங்கள் தலைமை தான் இதையும் முடிவு செய்து, அரசாங்கத்துடன் கூட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாடு பெற்றது.
ஜி20 தலைமைக்கான வாய்ப்பை இந்தியா பெற்றது. இந்தியாவுக்கு ஒரு பெரிய கவுரவம் கிடைத்தது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் திறனையும், தங்கள் சொந்த அடையாளத்தையும் உலகிற்கு முன் வெளிப்படுத்தியது. இதனால் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் வெகு தொலைவில் இல்லை. ஒரு சிலர் பதட்டமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சமாகும். அதை நாம் அனைவரும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறோம். நமது தேர்தல்கள் நாட்டின் பெருமையை அதிகரிக்கும் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றும் என்று நான் நம்புகிறேன்” என்றார்
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி
எலக்ஷன் ஃப்ளாஷ்: திருநாவுக்கரசருக்கு எதிராக காங்கிரசில் புதிய அமைப்பு! கவனிக்கும் நேரு