“அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது காங்கிரஸ் குடும்பம்”… நாடாளுமன்றத்தில் மோடி கடும் தாக்கு!

Published On:

| By Selvam

அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் காங்கிரஸ் குடும்பத்திற்கு வழக்கமாகிவிட்டது என்று பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 14) குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் நேற்றும் இன்றும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.

அரசியல் சாசன சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி இன்று பதிலுரையாற்றுகையில், “உலகம் முழுவதும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமைக்குரிய ஒரு தருணம். அரசியலமைப்பு சட்டத்தின் 75-ஆம் ஆண்டு விழா என்பது சாதாரணமானது அல்ல, அசாதாரணமானது. இந்த தருணத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுகளை தயார் செய்தவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75-ஆம் ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம். அதேவேளையில், நமது நாட்டில் அரசியல் அமைப்பு சட்டம் அழிக்கப்பட்டதையும் நாம் நினைவு கூர வேண்டும்.

உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், ஜனநாயகத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்ததை ஒருபோதும் மறக்கமுடியாது.

காங்கிரஸ் குடும்பமானது தவறான எண்ணங்களையும், செயல்களையும், கொள்கைகளையும் பின்பற்றுகிறது. அந்த குடும்பம் கருத்துச் சுதந்திரத்தைத் தாக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றியது, அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதித்தது. அரசியல் சட்டம் தடையாக இருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த நேரு மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.

அரசியல் சட்டத்தை மாற்றியதில் பிரதமர் நேரு விதைத்த விதைகளை இந்திரா காந்தி பின்பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட ரத்து செய்தார்.

எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, ஜனநாயகம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. குடிமக்களின் உரிமைகள் சூறையாடப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. மதவாதிகளின் அழுத்தத்தால் ஷா பானு வழக்கின் தீர்ப்பை புதிய சட்டம் இயற்றி ராஜீவ் காந்தி மாற்றினார். காங்கிரஸின் நெற்றியில் பட்ட இந்தப் பாவத்தை ஒருபோதும் துடைக்க முடியாது.

காந்தி குடும்பத்தின் தற்போதைய தலைமுறை அரசியலமைப்பைத் தாக்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. அரசியலமைப்பை அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் காந்தி குடும்பத்தின் வழக்கமாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

22 மாதங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்த இளங்கோவன்

Ilaiyaraaja Biopic: வசனம்லாம் தெறிக்குமே… திரைக்கதை யாரு எழுதுறான்னு பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel