மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று (ஜனவரி 2) காலை திருச்சி வந்த பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமாக இருந்தன. கனமழை காரணமாக பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் துணையாக இருக்கும். மாநில அரசுக்கும் ஆதரவை அளித்து வருகிறோம்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்துள்ளோம். அவர் சினிமா உலகத்தில் மட்டும் கேப்டன் அல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். திரைப்படங்களில் தனது திறமை மூலம் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு அரசியல்வாதியாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
”கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்”: மோடி
நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதை: பாரதிதாசன் பல்கலை விழாவில் முதல்வர் ஸ்டாலின்