பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இதை நிரூபிப்பது போல், கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு, இந்திய நிதி ஆணையத்துடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, மாநிலங்களுக்கான நிதியை குறைக்க முயற்சி செய்தார் என்று அல்ஜீசிரா ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2014-ஆம் ஆண்டு 13-ஆவது நிதி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில், மாநிலங்கள் பெற்றுவந்த 32 சதவிகித வரிப்பகிர்வை 42 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
ஆனால், பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சகமும் மாநிலங்களின் வரிப்பங்கை 33 சதவிகிதமாக குறைத்து, மத்திய அரசுக்கு பெரும் பகுதியை தக்கவைக்க விரும்பினர்.
இந்த விவகாரத்தில், அரசியலமைப்பு விதிகளின்படி மத்திய அரசுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அதாவது, நிதிஆயோக் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் அல்லது அதனை நிராகரித்து புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும். நிதி ஆயோக் உறுப்பினர்களுடன் வாதிடவோ, விவாதிக்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது.
ஆனால், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை குறைக்குமாறு நிதி ஆயோக் தலைவரான ஒய்.வி.ரெட்டியிடம் பிரதமர் மோடி மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது அரசியலமைப்பு உரிமையை மீறுவதாகும்.
இதுகுறித்து நிதிஆயோக் சிஇஓ பி.வி.சுப்பிரமணியன் கூறும்போது, ‘மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை குறைப்பது குறித்து பிரதமர் மோடி, நிதி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டி மற்றும் என்னுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. ஆனால், பிரதமரின் கோரிக்கையை ரெட்டி ஏற்கவில்லை. மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் வரிப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்’ என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த மறைமுகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும், மாநிலங்களுக்கு வரிப்பங்கை குறைக்க முயற்சித்ததை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மறைத்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டை வலுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் மாநிலங்களை பலப்படுத்த வேண்டும். இதன்காரணமாக தான் மாநிலங்களுக்கு 42 சதவிகித வரிப்பகிர்வை வழங்கினோம்’ என்று குறிப்பிட்டார்” என அல்ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை குறைக்க பிரதமர் மோடி நிதிஆயோக் தலைவரை வலியுறுத்தியதாக வெளியாகி உள்ள இந்த செய்தி, தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!
சென்னை வரும் பிரதமர் : பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்!
தீவிரவாதிகளுக்கு துனை போகும் ஒரு ஊடகம்..இது எப்படி இந்திய தேச நலனுக்கு அக்கறை காட்டும்..வண்மையாக கண்டிகதக்க செயல்..