குவைத் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 21) குவைத் நாட்டிற்கு சென்றார்.
1981-ம் ஆண்டு இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன்பிறகு 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று குவைத் சென்றுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் குவைத் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்த, அப்துல்லா அல் பாரூ மற்றும் அதனை வெளியிட்ட அப்துல் லத்தீஃப் அல் நெசெப் ஆகிய இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் இந்த முயற்சி குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டியிருந்தார்.

குவைத்தில் நடைபெறும் 26வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவிகிதம் (10 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். தனியார் துறை மற்றும் உள்நாட்டுத் துறையில் அதிக இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மோடியின் இந்த குவைத் சந்திப்பின் போது சுவாரஸ்யமான சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஜுனேஜா என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “குவைத் வாழ் இந்தியர்களுடனான உரையாடலின்போது, 101 வயதுள்ள முன்னாள் ஐ.எஃ.ப்.எஸ் அதிகாரியான எனது தாத்தா மங்கள் சைனை நீங்கள் சந்திக்க வேண்டும். அவர் உங்களை மிகவும் விரும்புபவர்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “கண்டிப்பாக நான் அவரை குவைத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, பிரதமர் மோடி 101 வயதுள்ள முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி மங்கள் சைனை இன்று குவைத்தில் சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்!