புதிய பயணம்: சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி பேட்டி!
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளார்.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாள் நடைபெறுகிறது.
இன்று பழைய நாடாளுமன்றத்தில் முதல் நாள் சிறப்புக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுக்கால நாடாளுமன்ற சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சந்திரயான்-3-ன் வெற்றியால் நமது தேசியக்கொடி உலக நாடுகளிடையே உயர்ந்துள்ளது. நிலவில் உள்ள சிவசக்தி முனை ஒரு புதிய உத்வேக மையமாக மாறியுள்ளது. மூவர்ண புள்ளி நம்மை பெருமையடைய செய்கிறது. உலகம் முழுவதும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும் போது அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.
ஜி20 மாநாட்டை நடத்திய பிறகு இந்தியா, உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளது. இதற்காகவும் ஆப்பிரிக்கா யூனியன் ஜி20-ல் நிரந்தர உறுப்பினரானதற்கும் நம் நாடு எப்போதும் பெருமைப்படும். இவை அனைத்தும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான சமிக்ஞையாகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த சிறப்பு அமர்வு குறுகியதாக இருந்தாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.
இந்த அமர்வின் சிறப்பு என்னவெனில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் புதிய இலக்கில் இருந்து தொடங்குகிறது. புதிய இடத்திலிருந்து பயணத்தை முன்னெடுத்து செல்லும் போது 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
மோனிஷா
வன்னியர் இடஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!
உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு!