பழங்குடியினர் பெருமைகளை பற்றியும், மின்சாதன கழிவுகளை அகற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இன்று (ஜனவரி 29) நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் இந்திய வானொலி மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டில் முதன்முறையாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது பழங்குடியினர் பற்றி பெருமையாக பேசிய அவர், மின் கழிவுகளை முறையாக அகற்றுவதன் அவசியம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “உங்களுடன் உரையாடுவது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர்.
பழங்குடி மக்களின் வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. அதற்கென்று பல்வேறு சொந்த சவால்களை கொண்டுள்ளன. இவை எல்லாம் இருந்தபோதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்.
பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்களும், சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினர் பற்றிய ஆய்வில் ஈடுப்பட்ட பல பெரும் பிரபலங்களும் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அது நாம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.” என்று பேசினார்.
தொடர்ந்து மின்கழிவுகள் குறித்து பேசுகையில், ”ஒவ்வோர் ஆண்டும் 5 கோடி டன் மின் கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தூக்கி எறியப்படும் இ-கழிவுகளில் இருந்து, 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்களை வெவ்வேறு நடைமுறைகளின் வழியே நாம் பிரித்து எடுக்க முடியும்.
ஒருவர் தனது பழைய மின்சாதன கருவிகளை மாற்றும்போது, அது முறையாக குப்பைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பதை கவனிக்க வேண்டும். அவை முறையாக நீக்கப்படவில்லை எனில், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கவனமுடன் கையாளப்பட்டால், பொருளாதார மீட்சிக்கான மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கான ஆற்றல் மிக்க சக்தியாக அது மாறும். எனவே மின்சாதனப் பொருட்களை, அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு : ஏ.எஸ்.ஐ கைது
எமெர்ஜென்சி எக்சிட் திறப்பு: பயணி மீது வழக்குப் பதிவு!