சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக அரசின் பிரதிநிதிகள் நேற்று (ஜூலை 19) அழைப்பு விடுத்தனர்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. 200 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன் தொடக்கவிழா வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், துவக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி தலைமையிலான தமிழக பிரதிநிதிகள் ஆகியோர் பிரதமருக்கு அழைப்பு விடுக்க அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்து ’செஸ் ஒலிம்பியாட் 2022’ தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிச் சின்னமான “தம்பி”யின் சிலையை பிரதமருக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய செய்தி ஒளிபரப்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் தமிழக குழு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
கிறிஸ்டோபர் ஜெமா