முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் தொடங்கி தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தி நினைவுகூர்ந்து வருகின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன்னில் அரசு சார்பில் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
ஓபிஎஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர்.
பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதுபோன்று பல்வேறு தலைவர்களும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முத்துராமலிங்க தேவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
முதல்வர் ஸ்டாலின்
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!
“தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தெய்வத் திருமகனார் தேசத்தை நேசித்தார். தெய்வீகத்தை வளர்த்தார். ஆன்மீகத்தில் ஆழமான பற்றுக் கொண்டார். வீரத்தின் விளை நிலமானார்.
இல்லார்க்கு ஏழைப்பங்காளர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக காத்த தெய்வத்திருமகனார் பசும்பொன் தேவர் அய்யாவை வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்! என்று மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரியா