அரசுமுறை பயணமாக மூன்று நாட்கள் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்தசூழலில், கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு சென்றார். அங்கு மரியன்ஸ்கி அரண்மையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா – உக்ரைன் இடையேயான உறவை பலப்படுத்துவது, ரஷ்யா உடனான மோதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி உக்ரைன் சென்றது சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அமெரிக்கா சென்ற மோடி, நியூயார்க்கில் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்ட ஒப்பந்தங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். உக்ரைனில் விரைவில் அமைதி திரும்ப இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம் நம்பிக்கை தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக சந்திக்கிறேன். இருதரப்பு நாடுகளின் உறவுகளை வளர்த்து வருகிறோம். மேலும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுகிறோம்.
சர்வதேச அரசியல் தளங்களில் குறிப்பாக ஐநா மற்றும் ஜி20-யில் எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும், உக்ரைனில் அமைதி திரும்பது குறித்தும், இரண்டாவது அமைதி உச்சி மாநாட்டிற்கு தயாராவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டோம்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான இந்தியாவின் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘புஷ்பா 2’ புது போஸ்டர்… ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன படக்குழு!
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு… சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!