அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இன்று (பிப்ரவரி 14) சந்தித்து இருதரப்பு நாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். modi meets donald trump
இந்த சந்திப்பின் போது பேசிய மோடி, “அமெரிக்காவை எப்போதும் முதன்மையான நாடாக அதிபர் டிரம்ப் வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். நானும் அதையே செய்கிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் பொதுவானவர்கள்” என்றார்.

அதற்கு டிரம்ப், “இந்தியாவில் மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார். எங்களுக்கிடையே சிறந்த நட்பு உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்” என்று கூறினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது “உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மோடி, “போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் எடுத்துவரும் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக உலக நாடுகள் கருதுகிறது. ஆனால், நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை, அமைதியின் பக்கம் இருக்கிறோம். நான் புதினை சந்தித்தபோது, இது போருக்கான காலம் அல்ல என்று அவரிடம் கூறினேன். அனைத்து நாடுகளும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியும்” என்றார்.
தொடர்ந்து, இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் வரிவிதிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர். இந்தியா – அமெரிக்கா இடையே சில அற்புதமான ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்தார். modi meets donald trump