தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்பட நாயகர்களை நேரில் சென்று சந்தித்தார்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைப்பது, சென்னை – கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஏப்ரல் 8) பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்.
சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்பு அளித்தார். பின்னர் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மைசூருக்கு புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து இன்று (ஏப்ரல் 9) காலை மைசூரு அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றார். ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், மூன்று நாள் மெகா நிகழ்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த பிரதமர் மோடி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார்.
அங்கு அவருக்கு 22 வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை பிளிறி வரவேற்பு அளித்தன. மேலும் பிரதமரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளை பார்வையிட்டு கரும்புகளை உணவாக வழங்கினார். பின்னர் அங்கிருந்த மூத்த யானை பாகன்களுடன் உரையாடினார் பிரதமர்.
பின்னர் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை சென்று சந்தித்தார். மேலும் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் பிரதமர் பார்வையிட்டார்.
முழுமையாக 55 நிமிடங்களை முதுமலை புலிகள் காப்பகத்தில் செலவழித்த பிரதமர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் மசினக்குடியில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மைசூரு புறப்பட்டு சென்றார்.
மோனிஷா
விடிய விடிய காத்திருந்து… டிக்கெட் வாங்கிச் செல்லும் சி.எஸ்.கே ரசிகர்கள்