பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகக் கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது முதல் மீண்டும் விமானம் ஏறும் வரை அனைத்து நிகழ்வுகளும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனால் சத்தமில்லாமல் பிரதமர் மோடி சென்னை விசிட்டின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகளைச் சந்தித்து உற்சாகமூட்டியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட 9 குழந்தைகளை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள அறையில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பானது பத்து நிமிடங்கள் நடந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 9 குழந்தைகளிடம் பிரதமர் மோடி பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரே ஆஃப் லைட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.
ரே ஆஃப் லைட் தொண்டு நிறுவனர் பிரியா ராமச்சந்திரன் இதுகுறித்து தி இந்துவிடம் கூறுகையில், “குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதற்காக இந்த தொண்டு நிறுவனத்தை 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 210 குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வருகிறோம். குழந்தைகளிடம் பிரதமர் மோடி மிகவும் கனிவுடனும் அன்பாகவும் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார் என்றும் பிரியா கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு தரப்படி, உலகம் முழுவதும் சிகிச்சையின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் காப்பாற்றப்படுபவர்களின் விகிதம் 20 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளிலும் உயிர் வாழும் விகிதம் இதே அளவில் தான் இருக்கிறது. 85சதவிகித குழந்தைகள் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றனர். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதற்கு இங்கு வாழும் குழந்தைகளே சான்று என்றும் கூறினார்.
இந்த சந்திப்பின் போது குழந்தைகளுக்கு அட்டோகிராப் போட்டுக்கொடுத்து மகிழ்வித்தார் பிரதமர் மோடி.
செல்வம்