pm modi mann ki baat programme
புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் அனைவரும் 5 உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 31) வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பேசுவார். அந்தவகையில் 2023-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதில் குரல் நிகழ்ச்சியில் காசி தமிழ் சங்கம், வேலுநாச்சியார் பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிலிருந்து காசி வந்தார்கள்.
அங்கே அவர்களோடு உரையாட நான் செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணியை பொதுமேடையில் முதன்முறையாகப் பயன்படுத்தினேன். மேடையிலே நான் ஹிந்தியிலே உரையாடினேன் ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணி காரணமாக, அங்கே இருந்த தமிழர்களால் என்னுடைய உரை, உடனடியாக தமிழில் கேட்க முடிந்தது.
காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த தமிழ்ச் சகோதரர்கள் இந்தப் பரீட்சார்த்த முயற்சியால் மிகவும் உற்சாகமடைந்தார்கள்.
பாரத பூமிக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசத்தின் பெருமைமிகு பெண்கள் பெருமிதம் சேர்த்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிபாய் ஃபுலே, ராணி வேலு நாச்சியார் போன்றோர் இப்படிப்பட்ட இரண்டு ஆளுமைகள். அவர்களுடைய தனித்தன்மை ஒவ்வொரு யுகத்திலும் பெண்சக்தியை முன்னேற்றும் பாதையைத் தொடர்ந்து துலக்கும் விளக்குத் தூண்கள் போன்றவை. ஜனவரி 3ஆம் தேதியன்று நாமனைவரும் இந்த இருவரின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறோம்.
நண்பர்களே, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். தமிழ்நாட்டின் என்னுடைய சகோதர சகோதரிகள் இன்றும் கூட வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயரை நெஞ்சில் பதித்துப் போற்றி வருகிறார்கள்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக இராணி வேலு நாச்சியார், எப்படி வீரத்துடன் போராடினார், தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார் என்பது பெரும் உத்வேகத்தை அளிக்க வல்லது. ஆங்கிலேயர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய இவருடைய கணவர் கொலை செய்யப்பட்டார். இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், மருது சகோதரர்கள் அதாவது தனது தளபதிகளோடு இணைந்து ஒரு படையை உருவாக்கி, பல ஆண்டுகள் வரை அதை வலுப்படுத்தினார்.
பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார், மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார். முதன்முறையாக படையில் பெண்களுக்கென்று ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தியோர் பட்டியலில் இராணி வேலு நாச்சியாரின் பெயர் தான் முன்னணி வகிக்கிறது
2024ஆம் ஆண்டு இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கவிருக்கிறது. பாரத தேசத்தின் சாதனைகள் அனைத்து பாரத நாட்டவர்களின் சாதனைகள். நாம் 5 உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு, பாரத நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து ஈடுபட்டு வர வேண்டும்.
எந்த ஒரு வேலையை நாம் செய்தாலும் கூட, எந்த ஒரு முடிவினை நாம் எடுத்தாலும் கூட, இதனால் என் தேசத்திற்கு என்ன கிடைக்கும், இதனால் என் தேசத்திற்கு என்ன சாதகம் ஏற்படும் என்பதே நமது முதன்மையான உரைகல்லாக இருக்க வேண்டும். Nation First – தேசத்திற்கே முதன்மை என்பதை விட மேலான மந்திரம் வேறொன்றுமில்லை. இந்த மந்திரத்தை அடியொற்றி நாட்டுமக்கள் நாமனைவரும், நம்முடைய தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம்,
தற்சார்புடையதாக இந்தியாவை மாற்றுவோம்.
நீங்கள் அனைவரும் 2024ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களை எட்ட வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உடலுறுதியோடு இருக்க வேண்டும், அளவற்ற ஆனந்தத்தோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.
2024ஆம் ஆண்டிலே, நாம் மீண்டும் ஒரு முறை நாட்டுமக்களின் புதிய சாதனைகள் தொடர்பாக உரையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யாருடன் தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரன் பதில்!
சாதி அடையாளத்துடன் விவசாயிகளுக்கு ED சம்மன்: கிருஷ்ணசாமி கண்டனம்!
pm modi mann ki baat programme