நைஜீரியாவில் பிரதமர் மோடி… இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Published On:

| By Selvam

நவம்பர் 16 முதல் 21 வரை ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.

அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நமது ராஜீய கூட்டாண்மையை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பியுள்ள இந்திய சமூகத்தினரையும், நைஜீரியாவைச் சேர்ந்த நண்பர்களையும் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பிரேசிலில், 19-வது ஜி-20 உச்சிமாநாட்டில் முக்கூட்டு உறுப்பினராக நான் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு, இந்தியாவின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பு, ஜி-20-ஐ மக்களின் ஜி-20 ஆக உயர்த்தியது.

பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன்.

அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில் கயானாவுக்கு நான் மேற்கொள்ளும் பயணம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இருக்கும்.

இந்தப் பயணத்தின்போது, 2-வது இந்தியா- கரீபியன் சமுதாய  உச்சிமாநாட்டில் பங்கேற்கும் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்க உள்ளேன்.  வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், நமது ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு நமக்கு உதவும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை நைஜீரியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அதிபர் போலா அகமது டினுபு தலைமையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி வருகையை முன்னிட்டு நைஜீரியா வாழ் இந்தியர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளில் இந்திய தேசிய கொடியை ஏந்தி வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர். மோடி அவர்களுக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து நைஜீரியா அதிபர் போலா அகமதுவுடன் பிரதமர் மோடி இருதரப்பு நாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தினம் தினமும் உன் நினைப்பு’… ‘விடுதலை 2’ பாடல் ரிலீஸ்!

விருதுநகர்: பசியோடு வீட்டுக்குள் நுழைந்த பெரியவரை கம்பத்தில் கட்டிவைத்த அவலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share