நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி தமிழக பாஜக மாநில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (ஜனவரி 2) நடைபெறும் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் திருச்சி புதிய விமான நிலைய முனையம் உள்ளிட்ட ரூ.19,850 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் திட்டங்களை துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பாரதி தாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கி.மீ தொலைவுள்ள சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு பாஜக மாநில நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிகிறார். பின்னர் பூத் கமிட்டி அமைப்பது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக சில முக்கிய அறிவுறுத்தல்களை மோடி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள தமிழகம் வந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் பாஜக மாநில நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!