பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்துக்கும், ஓட்டுக்கும் மட்டும் தான் தமிழ்நாடு வருகிறார் என்று விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. மயிலாடுதுறையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.
இன்று (மார்ச் 4) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறப்பு விழா, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறைக்கு கொண்டு வந்த மற்றும் கொண்டு வரப்போகும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் தேர்தலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தைக் காட்டுகிறவர்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்று அவசியமில்ல. உங்களுக்கே தெரியும்.
இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி இருக்கிறார் பாரதப் பிரதமர். வரட்டும். அதை வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கின்ற மிக மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டு வரட்டும்.
அப்படி இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும், ஒட்டும் மட்டும் போதும் என்று வருகிறார்கள்! நாம் கேட்பது என்ன? சமீபத்தில், இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம்.
அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வந்தாரா? இல்லை! ஒரு ரூபாய் கூட, ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்கவில்லை!
தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும் ஆதரவு கேட்டு வருகிறார்களாம்.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவர்களை பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசின் பக்கம்தான் இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திராவிடம் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ரவி
‘ராஜதந்திரம்’ – மோடி நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!
வெயில் ரொம்ப அடிக்குறது ‘இந்த’ மாவட்டத்துல தானாம்!
‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபலம்!