எதிர்கட்சிகள் கூட்டம்: மீண்டும் திமுகவை சாடிய மோடி

Published On:

| By christopher

pm modi attacked dmk

‘குடும்பத்தின் மூலம் மற்றும் குடும்பத்திற்காக  ஊழல்’ என்பது தான் எதிர்க்கட்சிகளின் மந்திரம் என்று பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று (ஜூலை 18) காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “சுமார் ரூ. 710 கோடி செலவில் சிப்பி வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், அந்தமான் தீவை நாட்டுடன் இணைப்பதை அதிகரிக்கும்.

மொத்தம் 40,800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட புதிய முனைய கட்டிடம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்” என்றார்.

மேலும் அவர், பொன்முடி வீட்டில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனையை சுட்டிக்காட்டி திமுகவை ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கட்சி என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர், “தமிழகத்தில் ஊழல் நடந்தாலும் எதிர்க்கட்சிகள் திமுகவை குற்றமற்ற கட்சியாக பார்க்கின்றன. மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வன்முறை பற்றி யாரும் பேசவில்லை” என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ”அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை. ஊழல்தான் அவர்களின் உந்துதலாக உள்ளது.

ஊழலை கணக்கிட்டே கூட்டத்தில் அவர்களின் இருக்கை உயரும். அவர்களின் மந்திரம் ’குடும்பத்தால் மற்றும் குடும்பத்திற்காக ஊழல்” என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி மத்தியபிரதேசத்தில் நடந்த கூட்டத்தில், “தி. மு. க குடும்ப அரசியலை நடத்துகிறது.  தி. மு. க வெற்றி பெற்றால் அவர்களது குடும்பம்தான் வளர்ச்சி அடையும்” என்று விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்து வரும் நிலையில் மீண்டும் தி மு க வை குறிவைத்து தாக்கி பேசியுள்ளார் மோடி.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேபோன்று, பா. ஜ. க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை நடத்தும் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக பா. ஜ. க தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் நடைபெறும் கூட்டங்களை முன்னிட்டு இரு தரப்பினரும் ஒருவருவருக்கொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ED சோதனை: பொன்முடியிடம் போனில் உறுதியளித்த ஸ்டாலின்

ஜவான்: நயன்தாரா தோற்றம் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share