“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!

அரசியல்

பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பரிசாக அளியுங்கள் என்று பொதுமக்களுக்கு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 29) வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி பேசி வருகிறார்.

அந்தவகையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசும்போது,  “நண்பர்களே, இந்த மாதம் மேலும் ஒரு மகத்துவமான இயக்கத்தின் பத்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது.  இந்த இயக்கத்தின் வெற்றியில், தேசத்தின் பெரிய தொழில்கள் தொடங்கி, சிறிய கடைக்காரர்கள் வரை பலரின் பங்களிப்பும் அடங்கி இருக்கிறது.

நான் இந்தியாவில் தயாரிப்போம் என்பதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.  இன்று ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்த இயக்கத்தால் மிகுந்த ஆதாயம் அடைந்து வருகின்றார்கள்.

இந்த இயக்கத்தால் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தங்களுடைய திறன்கள் – திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது.

இன்று பாரதம் தயாரிப்பின் சக்திபீடமாக ஆகி வருகிறது, தேசத்தின் இளைஞர்சக்தி காரணமாக உலகெங்கிலுமுள்ளோர் பார்வையும் நம்மீது தான் குவிந்திருக்கிறது.   வாகனத் தயாரிப்பாகட்டும், ஜவுளிகளாகட்டும், விமானங்களாகட்டும், மின்னணுப்பொருட்களாகட்டும், பாதுகாப்புத் தளவாடங்களாகட்டும், அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தேசத்தில் அந்நிய நேரடி முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கூட நமது இந்தியாவில் உருவாக்குவோம் என்பதின் வெற்றிக்குப் பரணி பாடுகிறது.  இப்போது நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

முதலாவதாக, தரம் – அதாவது நமது தேசத்தில் தயாரிக்கப்படுபவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.  இரண்டாவதாக உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல். அதாவது அந்தந்த வட்டாரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

மனதின் குரலில் நாம் #MyProductMyPride குறித்தும் விவாதித்திருக்கிறோம். உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளிக்கப்படுவதால், நாட்டு மக்களுக்கு எந்த வகையில் ஆதாயம் ஏற்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டையும் முன்வைக்கிறேன்.

பண்டிகைகளின் இந்தப் பருவத்தில் நீங்கள் மீண்டும் உங்களுடைய பழைய உறுதிப்பாட்டை மறந்துவிட வேண்டாம்.  எந்த ஒன்றை நீங்கள் வாங்க நேர்ந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு பரிசுப் பொருளை நீங்கள் அளித்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  ஏதோ மண்அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக ஆகாது.

உங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச ஊக்கமளித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், பாரத நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அது நம்முடைய பெருமிதம், இந்த கௌரவத்தை, இந்தப் பெருமிதத்தை நாம் எப்போதும் கொண்டாடுவோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!

“பாலாஜியின் தியாகத்தை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”: ஸ்டாலின் காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *