மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் இன்று (ஏப்ரல் 29) எழுதியுள்ள கடிதத்தில், “மதிமுகவை தொடங்கியபோது, வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது. இதனை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது.
மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகத்துடன் இணைக்க வேண்டும்.
மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது.” என்று திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக வைகோவின் மகனான துரை வைகோவிற்கு தலைமை கழகச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டபோது திருப்பூர் துரைசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக எம்.பி மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பேனா நினைவுச் சின்னம்… தவறான முன்னுதாரணம்: பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!