தேனி தொகுதி எம்.பியாக ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
“மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன். இன்று காலை பழங்குடியின பெண்கள் இரண்டு பேர் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளார்கள். 2 மாதங்களுக்கு முன்பாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கடமையாக இருக்கிறது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுதியாக குரல் கொடுப்போம்.
எம்.பி.ரவீந்திரநாத் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “இந்த வழக்கில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்தாலும் உங்களை இதுவரை ஒருங்கிணைப்பாளர் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறதே என்ற கேள்விக்கு, “உங்களுக்கு புரிந்திருக்கிறது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை” என்று பதிலளித்தார்.
பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, “அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கான அழைப்பு எனக்கு வரவில்லை என்பதால் தான் நான் செல்லவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு” என்று பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
மோனிஷா
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பத்திரப் பதிவு ரத்து: நயினார் பாலாஜி
‘புராஜெக்ட் கே’ : பிரபாஸின் முதல் பார்வை!