தமிழகத்தில் கடைகோடி மக்களுக்கும் எந்த திட்டங்களும் போய் சேரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான இரண்டாவது வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம் இன்று(நவம்பர் 21) தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.
இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் (திமுக) ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்,
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், அரசுத்துறை செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொதுமக்கள் அனைவருக்கும் சமமான மருத்துவ சேவைகள் கிடைக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48, மனம் மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லாத் திட்டம்,
நடமாடும் மருத்துவக்குழு, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி ஊட்டச்சத்து கணக்கெடுப்பு, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசரகால மேலாண்மைப் பிரிவு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாநிலத்தில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் 27 லட்சம் குழந்தைகள், ஏழரை லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது.
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 2 முட்டை வழங்கப்பட்டு வந்ததை உயர்த்தி நவம்பர் முதல் 3 முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவக்குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவசேவை அளிக்கப்பட்டு வருகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பட்டினியின்மை எனும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் முறையாக செயல்படுவதை கண்காணிக்கும் பொருட்டு ஒரு தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களுடன் கூடிய மாநில உணவு ஆணையம் அமைக்ககப்பட்டுள்ளது.
பிரதமரின் முன்னோடி கிராமத்திட்டம், கிராமமக்கள் தொகையில் 50 விழுக்காடுக்கு மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களைச் சேர்ந்த 1357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு முக்கியமானவை. எந்த திட்டமாக இருந்தாலும் அவை கடைகோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்பதே நோக்கம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா
பிரதமர் பதவி நிரந்தரமில்லை: சத்யபால் மாலிக்!
ஆரூர்தாஸ் மறைவு: முதலமைச்சர், திரையுலகத்தினர் நேரில் அஞ்சலி!