“ஹரேன் பாண்டியா மாதிரி என் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன். இது உண்மையென்றால் என் நண் பர்களை நான் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு என்ன செய்கிறீர்களோ அதையே திருப்பிச் செய்வேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த இரட்டையர்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் உயர் நிலையில் இருப்பவர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர்”
இப்படியாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது பாஜகவின் டாப் வட்டாரங்களிலும், ஆர்.எஸ்.எஸ்.சின் டாப் வட்டாரங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த ட்விட்டர் பதிவிட்ட சில நிமிடங்களில் சுதிர்தா மிஸ்ரா என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாணவர், “அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் நீங்கள் இரட்டையரை குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று சுவாமியிடம் கேள்வி கேட்கிறார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த சுவாமி, “ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.
யார் இந்த ஹரேன் பாண்டியா?
ஹரேன் பாண்டியா குஜராத் மாநில பாஜகவில் மோடியை விட சீனியர். மோடிக்கு முன்னர் குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேலின் தீவிர ஆதரவாளர். இளவயதில் இருந்தே ஆர்.எஸ்,எஸ்.சில் பணியாற்றியவர்.
1998 முதல் 2001 வரை குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர். அரசியல் மாற்றங்களால் மோடி குஜராத் முதலமைச்சரான பிறகு ஹரேன் பாண்டியா உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு வருவாய்த் துறை அமைச்சரானார்.
2002 இல் மோடி ஆட்சியில் நடந்த குஜராத் கலவரத்தின்போது இரு எதிர் தரப்புகளையும் உட்காரவைத்து அமைதிப் பேச்சு நடத்தியவர் ஹரேன் பாண்டியா மட்டுமே. இதை குஜராத்தின் மற்ற அமைச்சர்கள் எதிர்த்தனர் என்று அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தனது வீட்டில் மாநில அரசு அதிகாரிகளை அழைத்து, இந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதற்கு தடையாக இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார் என நரேன் பாண்டியாதான் பத்திரிகைகளுக்கு தகவல் அனுப்பினார் என்று 2007 இல் அவுட் லுக் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே 2003 மார்ச் 26 ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்ற ஹரேன் பாண்டியா அகமதாபாத் லா கார்டனில் தனது கார் அருகே ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
2007 ஆம் ஆண்டில், சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்கர் அலி உள்ளிட்ட 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டு சிறை தண்டனை வழங்கியது.
குற்றவாளிகள் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் சென்றபோது, 29 ஆகஸ்ட் 2011 அன்று, பாண்டியாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தால் கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஜூலை 2019 இல், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியது. ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதுதான் ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் பின்னணி.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இப்போது தானும் ஹரேன் பாண்டியா போல கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக மோடி அமித் ஷா பெயர்களை பகிரங்கமாக குறிப்பிட்டுக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சுப்பிரமணியன் சுவாமி பாஜகவுக்கு வந்த பின்னணி!
ஜனதா கட்சித் தலைவராக அறியப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி தமிழக அளவிலும் இந்திய அளவிலும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியவர். 2013 ஆம் ஆண்டே அவர் தனது ஜனதா கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்த்தார், ‘அப்போதே பிள்ளை பூச்சிய மடியில கட்டிக்கிது பிஜேபி’ என்று தமிழ்நாட்டில் விமர்சனங்கள் எழுந்தன.
பாஜகவின் கொள்கை வகுப்புக் குழு உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு வந்தார். அதாவது மோடி அரசின் முதல் நிதியமைச்சரான அருண் ஜேட்லியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார் சுவாமி.
அதையடுத்து மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தார். இப்படி நாளுக்கு நாள் மோடி அரசின் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தினார்.
தனக்கு நிதி அமைச்சர் பதவியைக் கேட்டு மோடியிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும் அது கிடைக்கவில்லை என்பதால்தான் விமர்சனங்களை கூர்மைப்படுத்துகிறார் என்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன.
மோடியை விமர்சிக்கத் தொடங்கிய சுவாமி
நாளாக நாளாக பிரதமர் மோடி மீதே நேரடியாக விமர்சனங்களை வைத்தார் சுவாமி. ‘மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது’ என்று தெரிவித்தார். மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று தனது ட்விட்டரில் போட்டு, ‘பொருளாதாரத்தில் ஃபெயில், எல்லை பாதுகாப்பில் ஃபெயில்’ என்றெல்லாம் கடுமையாகத் தாக்கினார்.
சுவாமியின் அரசு பங்களா ஆக்கிரமிப்பு
இந்த நிலையில்தான் ராஜ்யசபா எம்பியாக இருந்த சுவாமியின் பதவிக் காலம் 2022 ஏப்ரல் மாதத்தோடு முடிந்துவிட்டதால் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நிர்வாக ரீதியாக தகவல் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சுப்பிரமணியன் சுவாமி, ‘நான் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவன். எனவே நான் தனியார் வீட்டில் வசித்தால் இசட் பிரிவு பாதுகாப்பு பணியாளர்களை அங்கே தங்க வைக்க முடியாது. நான் இசட் பிரிவு பாதுகாப்பில் தொடர்வதால் தொடர்ந்து என்னை அரசு பங்களாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினார்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், “சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி நிசாமுதீன் கிழக்கு பகுதியில் அரண்மனை போல பங்களா உள்ளது. அங்கே இசட் பிரிவு பாதுகாப்பு பிரிவை வழங்க எந்த வசதிக் குறைவும் இல்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அவரை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்டு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “சுப்பிரமணியன் சுவாமி இசட் பிரிவு பாதுகாப்பு கொண்டிருப்பவராக இருந்தாலும் அவரது எம்பி பதவிக் காலம் முடிந்துவிட்டதால் அவர் தனது அரசு பங்களாவை ஆறு வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
பங்களாவை காலி செய்ய மறுக்கும் சுவாமி
டெல்லி உயர் நீதிமன்றம் கெடு விதித்த ஆறு வாரங்களிலும் தனது அரசு பங்களாவை காலி செய்யாத சுப்பிரமணியன் சுவாமி அந்த கெடு முடியும் தேதியான அக்டோபர் 27 ஆம் தேதி, “நான் அரசு பங்களாவை காலி செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் அரசு வாக்கு கொடுத்தபடி தனியார் இடத்தில் இசட் பிரிவு பாதுகாப்புகான ஏற்பாடுகளை அரசு செய்யவே இல்லை. இந்த நிலையில் அரசு பங்களாவை எப்படி காலி செய்ய முடியும்?’ என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அக்டோபர் 31 ஆம் தேதி எடுத்துக் கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில்தான்…
அக்டோபர் 31 ஆம் தேதி பகலில், “என்னை ஹரேன் பாண்டியா மாதிரி என் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன்” என்று அதிர்ச்சி ட்விட்டை பதிவு செய்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
வெட்கங்கெட்ட பிளாக் மெயிலர்- சுவாமியை விமர்சிக்கும் பாஜக
அக்டோபர் 27 ஆம் தேதியே பாஜக டெல்லி நிர்வாகி சௌரப் சௌத்ரி , ‘வெட்கங்கெட்ட பிளாக் மெயிலர்’ என்று சுப்பிரமணியன் சுவாமியை குறிப்பிட்டு ஒரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.
அதில், “இன்று (அக்டோபர் 27) சுவாமி தனது அரசு வீட்டை காலி செய்வதற்கான கடைசி நாள். அதில் இருந்து மீண்டு வருவதற்காக அரதப் பழசான, ஆதாரங்களற்ற, நம்பிக்கையற்ற ட்விட்டுகளை வெளியிட்டு வருகிறார்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
சுவாமி தனது அரசு பங்களா உள்ளிட்ட விஷயங்களுக்காக ஹரேன் பாண்டியா விவகாரத்தைப் பயன்படுத்துகிறாரா என்ற கேள்விகள் சமூக தளங்களில் எழுந்துள்ளன. ஆனால் பாஜக சுவாமியின் இந்த விமர்சனத்துக்கு பதில் கொடுத்து அதை விஸ்வரூபம் ஆக்க விரும்பவில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
வேந்தன்
பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு!
இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே பையனை மணப்பேன்: பாகிஸ்தான் நடிகை!