உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது என்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (ஜனவரி 7) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பியூஷ் கோயல் பேசும்போது, “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்தது.
தற்போது உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பணவீக்கம் குறைந்து ஜிடிபி அதிகரித்துள்ளது.
உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் என அனைத்து உள்கட்டமைப்புகளும் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் அண்டு இந்தியா 75 சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது பிரதமர் மோடி ஐந்து வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதாவது, 2047-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். காலனியத்துவ மனோபாவத்தை ஒழிக்க வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டை மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்ட வேண்டும் போன்ற ஐந்து உறுதிமொழிகளை பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 43 சதவிகிதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழிற்சாலை, உள்கட்டமைப்புகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோருக்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது: பியூஷ் கோயல்
எடப்பாடி கலந்துகொள்ளும் எஸ்டிபிஐ மாநாடு: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!