வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி

அரசியல்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம் அளித்ததற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், காணாமல் போன 200-க்கும் மேற்பட்டோரை தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், பினராயி விஜயனிடம் ஜூலை 30-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்ட ஸ்டாலின், எல்லாவிதமான உதவிகளையும் கேரளாவுக்கு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவித்தார். தமிழ்நாடு சார்பில் மீட்பு படையினர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை ஜூலை 31-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

வயநாடு பகுதியின் நிலச்சரிவு குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் வேலுவிடம் விளக்கினார் பினராயி விஜயன்.  மேலும், தமிழ்நாடு அரசின் பேரிடர் குழு, மற்றும் நிவாரணப் பொருட்களுக்காகவும் நன்றி சொன்னார் பினராயி விஜயன்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு,  ‘நாம அண்டை மாநிலங்கள்.  மேலும் என்ன வேணும்னாலும் சொல்லுங்க. தமிழ்நாடு எப்போதும் உதவத் தயாராக இருக்கிறது’ என்ற ஸ்டாலினின் செய்தியை கேரள முதல்வரிடம் தெரிவித்தார்.

தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு சார்பில் ரூ.5 கோடியை அமைச்சர் எ.வ.வேலு மூலம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. உங்கள் ஆதரவும் அரவணைப்பும் இந்த இக்கட்டான தருணத்தில் மிகவும் பாராட்டத்தக்கது. நீங்கள் வழங்கிய நிதி வயநாடு மறுசீரமைப்பு பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: லேடீஸ் ஸ்பெஷல்… பீரியட்ஸுக்கு முன்… தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

டாப் 10 நியூஸ் இந்தியா Vs இலங்கை ஒருநாள் போட்டி முதல் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் வரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0