கேரளாவில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் 9 பேர் உடனடியாக பதவி விலகக் கோரி, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் கெடு விதித்து உத்தரவிட்டது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜஸ்ரீ நியமனத்தை அக்டோபர் 21-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின் படி மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தேடல் குழு 3 பேருக்கு குறைவில்லாத நபர்களை துணை வேந்தர் பொறுப்புக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், இதற்கு மாறாக ராஜஸ்ரீ-யின் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டு இருந்ததால் இந்த நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி மேலும் 9 துணை வேந்தர்கள் திங்கள் கிழமை காலை 11:30 மணிக்குள் பதவி விலக வேண்டும் என கெடு விதித்து கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் கான் ஞாயிற்றுக் கிழமை மாலை உத்தரவிட்டார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பல்கலைக் கழகங்களின் பட்டியலுடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
அதில் கேரள பல்கலைக் கழகம், மகாத்மா காந்தி பல்கலைக் கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், கேரளா மீன் மற்றும் பெருங்கடல் வள ஆராய்ச்சிப் பல்கலைக் கழகம், கன்னூர் பல்கலைக் கழகம், ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், ஸ்ரீசங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகம் ஆகிய 9 பல்கலைக் கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
![pinarayi vijayan says governor arif mohammad khan working for rss](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/26-Pinarayi-Vijayan-and-Mohammed-Khan.jpg)
இந்நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ” இந்த 9 பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறுகிறார். இந்த பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது. துணை வேந்தர்கள் சட்ட விரோதமாக நியமனம் செய்யப்பட்டிருந்தால் அதன் முதன்மை பொறுப்பு ஆளுநரையே சாரும்.
துணை வேந்தர் பதவியை ஆளுநர் ஆரிஃப் கான் தவறாக பயன்படுத்தி, துணை வேந்தர்களின் அதிகாரத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். ஆளுநர் பதவி அரசியலமைப்பின் கண்ணியத்தை உயர்த்திப்பிடிக்கவே தவிர, அரசுக்கு எதிராக செயல்பட அல்ல . ஆளுநர் ஆரிஃப் கான் ஆர்.எஸ்.எஸ்.ன் கருவியாக செயல்படுகிறார். துணை வேந்தர்களை பதவி விலகச் சொல்ல ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பதவி விலக மறுத்த சம்பந்தப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு நேற்று மாலை மீண்டும் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆரிஃப் கான், நேற்று மாலை 5 மணிக்கோ அல்லது நவம்பர் 3-ம் தேதிக்குள்ளோ துணை வேந்தர் பதவியில் நீடிக்க தங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதை காட்ட வேண்டும் என கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக பல்கலைக் கழக துணை வேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். நேற்று மாலை இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது துணை வேந்தர்கள் தங்கள் தரப்பில் விளக்கமளிக்க ஆளுநர் நேரம் கொடுத்திருப்பதால், அவர் இறுதி முடிவு எடுக்கும் வரை துணை வேந்தர்கள் பதவியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது.
அப்துல் ராஃபிக்