அறிவாலயத்தின் தூண் சரிந்தது: துணை மேலாளர் ஜெயக்குமார் மரணம்!

Published On:

| By Aara

Arivalayam Deputy manager Jayakumar died

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 13) அதிகாலை காலமானார். அவருக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது 75 வயதான ஜெயக்குமார் இளம் பருவத்திலேயே திமுகவில் சேர்ந்தவர். இவரது துடிப்பான பணிகளை கண்ட அப்போதைய திமுக தலைவர் கலைஞர் ஜெயக்குமாரை அப்போது திமுக தலைமை அலுவலகமாக இருந்த அறிவகத்தின் நிர்வாக பணிகளை கவனிக்கச் சொன்னார்.’

அதன் பின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக அலுவலகம் செயல்படத் தொடங்கியபோது அங்கேயும் பணியாற்றினார் ஜெயக்குமார். அதன் தொடர்ச்சியாக அறிவாலயத்தில் பணியாற்றினார்.

நிர்வாகிகள் -தலைமை- கட்சி பத்திரிகையான முரசொலி ஆகிய மூன்று பெரும் மையங்களை இணைக்கும் பாலமாக செயல்பட்டவர் ஜெயக்குமார். கட்சியினரின் புகார் கடிதங்கள், அது தொடர்பான விசாரணைகள், அதன் பொருட்டு தலைமை எடுக்கும் நடவடிக்கையை முரசொலியில் பிரசுரித்தல், கட்சி நிர்வாகிகள் நியமன அறிவிப்புகள் என திமுகவின் நிர்வாகப் பணிகளில் கரை கண்டவர் ஜெயக்குமார்.

பிப்ரவரி 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று அறிவாலய அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது  தலை கடுமையாக வலிப்பதாக சொல்லியிருக்கிறார். பின்  வாந்தியெடுத்திருக்கிறார். உடனடியாக அவரை அலுவலக நிர்வாகிகள் காவிரி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். ரத்த அழுத்தம் மிக கூடுதலாக இருந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 13) அதி காலை காலமானார்.

தகவல் அறிந்ததும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சட்டமன்றம் செல்வதற்கு முன்பே ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு கண் கலங்க அஞ்சலி செலுத்தினார்.

Arivalayam Deputy manager Jayakumar died
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் அவர்கள் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது.

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன். தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்.

அறிவகத்தில் தொடங்கிய பயணம் அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம் எனத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் என உச்சம் பெற்றது. தலைமைக் கழகத்தை நாடி வந்த ஒவ்வொரு உடன்பிறப்பும் அன்போடும் உரிமையோடும் உறவாடி ‘அறிவாலயம்’ ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர்.

அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தேன்; அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன்; அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன்; அவரது குடும்பத்தில் ஒருவனாய் இருந்தேன். உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜெ.பி.- திமுகவில் அதிர்வலைகள் ஏன்?

”அடிமேல் அடி” ஆர்சிபி-க்கு வந்த அடுத்த சோதனை… என்னன்னு பாருங்க!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share