தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் புகைப்படத்தை மதுபாட்டிலில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சின்ன ராஜாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு பிரகாஷ் (வயது 17) என்ற மகனும் விஷ்ணுபிரியா (வயது 16) என்ற மகளும் உள்ளனர். மனைவி கற்பகத்திடம் பிரபு தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு விஷ்ணுபிரியா பலமுறை தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை வந்ததால் மனமுடைந்த விஷ்ணுபிரியா கடந்த ஜூன் 3 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து விசாரணை செய்தபோது, சிறுமி விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எனது மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது.
எனது ஆசை என்னவென்றால் எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும் என அந்த சிறுமி உருக்கமாக அதில் எழுதி வைத்திருந்தார்.
சிறுமியின் இந்த கடிதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று(ஜூன் 5) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுபிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமி விஷ்ணு பிரியாவின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மதுபாட்டிலில் ஒட்டப்படும் சிறுமியின் புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் தனது மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதனைப் பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஒடிசா ரயில் விபத்து : பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!
சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!