pickpocket Rahul who criticized Modi

பிக்பாக்கெட் – மோடியை விமர்சித்த ராகுல்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

அரசியல்

pickpocket Rahul who criticized Modi

பிரதமர் மோடியை பற்றி பேசும் போது பிக்பாக்கெட் என ராகுல் காந்தி குறிப்பிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

கடந்த நவம்பர் 22ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

அப்போது அவர், “பிக்பாக்கெட் அடிப்பவர்கள் எப்போதும் மூன்று பேர் கொண்ட குழுக்களாகத்தான் வருவார்கள். ஒருவர் முன்னே வருவார், அவர் பின் ஒருவர் வருவார், தூரத்தில் இருந்து ஒருவர் கண்காணிப்பார். இப்படி குழுவாக வந்து மக்களை திசை திருப்பி கொள்ளையடிப்பார்கள்.

அதுபோன்று மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லீம், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என பேசி கவனத்தை திருப்புவார். அப்போது அதானி பின்னால் வந்து உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார்.

இவர்களுக்கு இடையே யாராவது வருகிறார்களா என பார்த்துக்கொண்டிருப்பவர்தான் அமித்ஷா. இப்படிதான் இந்திய அரசு நடக்கிறது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். பிரதமர் மோடியை கெட்ட சகுனம் என்றும் உலக கோப்பையில் இந்தியா தோற்றதற்கு அவர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதேசமயம், தேர்தல் ஆணையத்திலும் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் 25.11.2023ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதற்கு ராகுல் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், அரசியல் தலைவர்கள் இதுபோன்று பேசுவதை தடுக்க வழிமுறைகளை வகுக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 21)விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில், “இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், “இதுபோன்று பேசுவதை தவிர்ப்பது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பு.  ராகுல் காந்தி பேசியது சரியானதல்ல. தேர்தல் ஆணையம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்கும் போது, இதில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்திக்கு அனுப்பட்ட நோட்டீஸ் மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

முன்னதாக மோடி சமுதாயத்தை பற்றி ராகுல் பேசிய விவகாரத்தில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை நிறுத்திவைத்ததால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சர்தார் 2 படப்பிடிப்பிற்கு தயாராகும் கார்த்தி?

வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி : முதல்வர் நேரில் ஆய்வு!

pickpocket Rahul who criticized Modi

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *