திமுக ஆதரவாளரான புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி நேற்று (மார்ச் 3) உயிரிழந்தார்.
“அவரு சிரிப்பு இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு”, “இந்த செய்தி பொய்யா இருக்கக் கூடாதா” என அத்தனை உருக்கத்துடன் இரங்கல் பதிவுகள் நேற்று முதல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என இணையத்தில் இவரது புகைப்படம் தான் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. முதல்வர் தொடங்கி அமைச்சர் உதயநிதி, எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் என பலரும் இவரது புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இவர்?
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப். வயது 31. இவரது தந்தை அதிசயராஜ். தனது பெற்றோருக்கு மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இவருக்கு இரு அண்ணன்கள், ஒரு தங்கை உள்ளனர்.
காருண்யா கல்வி அறக்கட்டளையில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். கலைஞர் மறைந்த போது இவர் எடுத்த புகைப்படங்கள் பலவும் இணையத்தில் வைரலாகின. சென்னை சங்கமம், சமீபத்தில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை புகைப்படம் எடுத்துள்ளார்.
புகைப்படங்கள் எடுப்பதை ப்ரீலான்சராக செய்து வந்த ஸ்டாலின் ஜேக்கப், “What a Karwad” என்ற கிளவுட் கிச்சனையும் நடத்தி வந்தார். இந்த கிளவுட் கிச்சனின் துணை நிறுவனராக இருந்து வந்தார் ஸ்டாலின் ஜேக்கப்.
மீன் வகைகள் மட்டுமே இந்த கிச்சனில் சமைத்து வழங்கப்படும். ஸ்டாலின் ஜேக்கப்பே உணவை டெலிவரி செய்வார்.
நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய இவர் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். கனிமொழியை சந்தித்து எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
சாலை விபத்தில் மறைவு!
இந்தசூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவுடன் சேர்ந்து ஒளிப்பதிவு செய்துவிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த வாகனம் மீது லாரி மோதி தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருவரது உயிரையும் காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும், அதிக ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது ஸ்டாலின் ஜேக்கப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இரங்கல் பதிவுகள்
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,
“நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்”.
அமைச்சர் உதயநிதி
கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைதளங்களில் களமாடிய ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல். உன் உழைப்பை என்றும் மறவோம்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
“நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின் ஜேகப்பின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்”
கலைஞர் மறைவின் போது ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்டாலின் ஜேக்கப், இனி தனது புகைப்படங்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருப்பார்.
பிரியா
ஐ.நா.வை அடுத்து அமெரிக்கா… கைலாசாவின் அடுத்த சறுக்கல்?