டிஜிட்டல் திண்ணை: பிஎஃப்ஐ தடை- ஸ்டாலினைச் சுற்றிய சர்ச்சை! நடந்தது என்ன?
வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. விறுவிறுவென மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
”தமிழகம் உள்பட இந்தியா முழுதும் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகள் தொடர்பான இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை செய்தது.
இந்த சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சோதனையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, மதுரை, சென்னை என்று பல்வேறு இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன.
பிஎஃப்ஐ சோதனைக்கும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சுகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் தமிழக போலீஸ் தரப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக உடனடியாக கைது நடவடிக்கைகள் தொடங்கவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கோவை மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை;’ என்று குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான எல். முருகனும் இந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்தார்.
தேசப் பாதுகாப்பில் விளையாடாதீர்கள் என்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முருகன்.
இந்த நிலையில்தான் 26 ஆம் தேதி முரசொலியில் இதுவரையில் பாஜகவினர் தங்களுக்குத் தாங்களே பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தி விட்டு பிறர் மீது குற்றம் சாட்டிய சம்பவங்களைப் பற்றிய செய்திகள் முழு பக்கம் தொகுக்கப்பட்டு, அதற்கு, ‘பெட்ரோல் குண்டு வீச்சுகள்: காவல்துறையினர் இந்த கோணத்திலும் அணுகிப் பார்க்கலாமே?’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது.
ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பற்றி போலீஸாருக்கு அறிவுரை கூறும் விதமாக இந்த முழு பக்கச் செய்தி வெளியாகியிருந்தது.
இதைப் பார்த்த பாஜகவினர் இதை அப்படியே சாஃட்ப் காப்பி எடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்.
தமிழகம் முழுதும் பாஜகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் இவை அனைத்துமே பாஜகவினர் தங்களுக்குத் தாங்களே நடத்திக் கொள்ளும் தாக்குதல் என்று ஆளும் கட்சியின் நாளேடான முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.
எனவே தமிழக போலீஸார் இந்த சம்பவங்களை சரியாக விசாரிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை அமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் நிலை என்ன என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது என்று டெல்லிக்குத் தகவல்கள் பறந்தன.
இதற்கிடையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீதான சோதனைகளின் போதே கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த அமைப்பினர் சோதனையை எதிர்த்துப் போராடியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தகவல்கள் டெல்லிக்கு ரிப்போர்ட்டாக சென்றன.
இந்த பின்னணியில் மத்திய உள் துறை அமைச்சகம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சுகள் தொடர்பாக தமிழக உள்துறையிடம் விளக்கம் கேட்ட நிலையில்தான் கைது நடவடிக்கைகளை தமிழக போலீஸ் வேகமாக்கியது என்கிறார்கள் மத்திய உளவு வட்டாரத்தினர்.
இதற்கிடையே முரசொலியில் வெளியான செய்தி தொடர்பாகவும், தமிழக போலீஸ் நடவடிக்கை தொடர்பாகவும் மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இருந்து டீடெய்ல்டு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.
அதேநேரம் தமிழக போலீஸ் அடுத்தடுத்து நடவடிக்கைகளை வேகமாக்கியது. கடந்த வாரம் முழுதும் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஏடிஜிபி முதல் கடை நிலை காவலர் வரை அனைவரும் இரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அனைவரும் கட்டாயமாக இரவுப் பணியாற்ற வேண்டும். இரவில் தொடர்ந்து கணிகாணிப்பை அதிகப்படுத்த வேண்டும். இரவுக் கண்காணிப்புப் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதை போட்டோ எடுத்து உடனடியாக தத்தமது உயரதிகாரிகளுக்கு ரிப்ப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி இன்ஸ்பெக்டர்கள் இரவுப் பணியை போட்டோ எடுத்து டி.எஸ்.பி.க்கு அனுப்பி வைத்தார்கள். டி.எஸ்.பி.க்கள் தங்களது இரவுக் கண்காணிப்பை போட்டோ எடுத்து எஸ்.பி.க்களுக்கு அனுப்பி வைத்தார்கள். எஸ்.பி.க்கள் தங்கள் பணியை போட்டோ எடுத்து டிஐஜிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதேபோல தாங்கள் களத்தில் கண்காணிப்புப் பணியில் இருப்பதை டி.ஜி.ஜி.கள் ஐஜிக்கும்…. ஐஜிக்கள் ஏடிஜிபிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு நிலை அதிகாரிகளும் தங்களது இரவு, பகல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு தத்தமது உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள். தொடர்ந்து மேற்கொண்ட இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், பாஜகவினர் மீதான தாக்குதல்களை பற்றி விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, உயரதிகாரிகள் எல்லாம் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.
ஆனால் இதை பாஜக அரசியல் ஆக்கி வருகிறது. அதற்கு போலீஸ் பதில் சொல்ல முடியாது என்றும் கூறுகிறார்கள் தமிழக காவல்துறை வட்டாரத்தில்.
இந்த நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதித்து செப்டம்பர் 28 ஆம்தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியான அன்றே மாநில அரசும் உடனடியாக அந்த அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37 இன் 1967)-இந்திய அரசாங்கத்தால் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (PFI) சட்டவிரோத அமைப்பாக அறிவித்து ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களுக்கு மாநில அரசு ஆணை-வெளியிடப்பட்டது’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது.
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!
நவம்பர் 6 இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?