ban admk conference in madurai

மதுரை அதிமுக மாநாடு: முக்குலத்து அமைப்புகள் எதிர்ப்பு!

அரசியல்

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மாவட்ட எஸ்பியிடம் இன்று (ஆகஸ்ட் 12) மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 20 ஆம் தேதி நடத்த இருக்கும் மாநாட்டுக்கு பலத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே   முக்குலத்து  சமுதாயத்தினர் மதுரை அதிமுக மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக  ஓபிஎஸ்- டிடிவி காய் நகர்த்தி வருகிறார்கள் என்பதை “டிஜிட்டல் திண்ணை: மதுரை மாநாடு… ஓபிஎஸ் – டிடிவி திட்டம்!” என்ற தலைப்பில் மின்னம்பலத்தில்  ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில், “சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து மதுரை மாநாட்டுக்கு தென் மாவட்டத்திலிருந்து போதிய கூட்டம் திரண்டு விடக்கூடாது, அதிலும் குறிப்பாக முக்குலத்து சமுதாய மக்கள் அதிமுக மாநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே தென் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் முக்குலத்து அமைப்புகள் சாதி உணர்வை ஊட்டி எடப்பாடிக்கு எதிரான நமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அதிமுகவின் மதுரை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று ரகசிய பிரச்சாரம் செய்து வருகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் அடுத்த கட்டக் காட்சிகள் இன்று (ஆகஸ்டு 12) மதுரையில் அரங்கேறியிருக்கின்றன. மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்கள் அரங்கில் அதிமுக மாநாடு தொடர்பாக தேவரின கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தென்னாட்டு மக்கள் கட்சியின் தலைவர் கணேச தேவர் பேசுகையில், “ஆகஸ்ட் 20  எடப்பாடி அணியினரால் நடத்தப்படும் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மாநாட்டை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், கறுப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமி 68 சமூகத்தை ஏமாற்றி 10.5 % இட ஒதுக்கீட்டில் அவரது வெற்றிக்காக இரு தரப்பினரையும் ஏமாற்றி துரோகம் செய்துவிட்டார். அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்த தேவரினத்தை ஏமாற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைதி பூங்காவாக உள்ள தென்தமிழகத்தில் எடப்பாடி மாநாட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தமிழக அரசு மாநாட்டை தடை செய்ய வேண்டும். பதவி வெறிக்காக அரசியல் அதிகாரத்தில் இருந்து முக்குலத்தோர் சமுதாயத்தை வெளியேற்றிவிட்டார். பணம் கொடுத்து அனைத்தையும் சாதித்துவிடலாம் என நினைக்கிறார். முக்குலத்தோருக்கு செய்த துரோகத்தை நாங்கள் மறப்போம் என்று எடப்பாடி கனவிலும் கூட நினைக்கக்கூடாது.

தென் மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காமல் புறக்கணித்துவிட்டு அவர் சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய சுயநலவாதி எடப்பாடி பழனிச்சாமி” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா பேசியபோது, “தென்மாவட்டங்களில் எடப்பாடியை நுழைய விடமாட்டோம். எடப்பாடி பழனிச்சாமியை தென் மாவட்டங்களில் வெற்றிபெற விடமாட்டோம். இந்த மாநாட்டிற்கு முக்குலத்தோரை சேர்ந்த பெரும்பாலானோர் வருகை தரமாட்டார்கள். எடப்பாடி மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

எடப்பாடிக்கு துணை போகும் அவருடன் உள்ள செல்லூர் ராஜூ, உதயகுமார், காமராஜ், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாய நபர்களை ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தினரும் எதிர்ப்போம்.

தேவர் இன மக்கள் இந்த மாநாட்டிற்கு வரக்கூடாது. இந்த மாநாட்டிற்கு வந்தால் தேவர் இனத்தை அழிக்கும் சூழல் உருவாகும். தேவர் மீது ஆணையிட்டு சொல்கிறோம், அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு மாநாட்டிற்கு வர வேண்டாம்.

தேவர் ஜெயந்தி விழாவில் தங்க கவசத்தை அணிவிக்க தடையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் எந்த சமூகத்திற்கும் எதிரானவராக இருக்கவில்லை. ஆனால் எடப்பாடி முக்குலத்தோர் சமுதாயத்தை முடக்கும் எதிரியாக உள்ளார்.

உண்மையான ஆண்மை மிக்க தலைவராக இருந்தால் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும், மருதுபாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும் ஏன் மரியாதை செலுத்த வரவில்லை?” என்று  கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து முக்குலத்தோர் தேசிய கழகத் தலைவர் எஸ்.பி.ராஜா பேசியபோது, “பணத்தை கொடுத்தும் மதுவை கொடுத்தும் தேவர் சமூகத்தினரை வர வைக்க முயற்சி செய்கின்றனர். மாநாட்டை தடை செய்யக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

தென்மாவட்டங்களில் தேவர் சமூக மக்களை எடப்பாடி காசு கொடுத்து வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். எடப்பாடி ஆட்சியில் தென்மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.

எந்த தேவர் இனத்தவர்களும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அடிமையாக இருக்கமாட்டான். எங்கள் சமுதாயத்திற்கான எதிரி எடப்பாடி” என்றார்.

இந்த எதிர்ப்பை எடப்பாடி எவ்வாறு சமாளிக்க போகிறார் என்று அதிமுக வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இராமலிங்கம்

அன்பில் மகேஷ்க்கு நெஞ்சு வலி… விமானத்தில் வர சொன்ன முதல்வர்… நடந்தது என்ன?

செந்தில் பாலாஜி மீது 3,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
2
+1
3
+1
1

2 thoughts on “மதுரை அதிமுக மாநாடு: முக்குலத்து அமைப்புகள் எதிர்ப்பு!

  1. தென் தமிழ்நாட்டில் அனைத்து சமூக
    மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்

    1. இதில் சாதிய சிந்தனைகளுக்கு வேலை இல்லை. யார் யாரையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *